வியாழன், 2 டிசம்பர், 2010

நிலவின் கதை
இரவு வகுப்பு முடிந்து
புத்தகப்பையின் கனம் தாங்க முடியாமல்
திரும்பும் சிறுமியை
உற்சாகம் கொள்ள வைக்கிறது
இரைந்து கிடக்கும் நட்சத்திரக் கூட்டம்
நட்சத்திரங்களை எண்ணுவதில்
ஆர்வம் வலுத்ததும்
அவளின் கவனத்தை சிதைக்கிறது
நாலா திசைகளிலும் நகர்ந்து
வேடிக்கை காட்டும் நிலவு
அதட்டியும் மிரட்டியும் ,
உடன் அழைத்து வருமவள் சுட்டி
நிலா
ஒரு நட்சத்திரத்தின் கால் தடுக்கி
சாலையின் கை அகல நீரில் விழுகிறது
ஆர்வம் மேலோங்க கையில் அள்ளி
இது நாள் வரை நிலாக் கதை சொல்லும்
தன் பாட்டியிடம் காட்ட
ஓடி வருகிறாள்
தன் களைப்பு மறந்த
அச்சிறுமி.


இறுதி மிடரை பருகியவன்
ஒரு சிகரெட் நெருப்பில்
கிட்டியது  அவன் நட்பு
சந்திரபாபுவின் நகைச்சுவைக்குள்
நுழைந்து
சமகால இலக்கியம்
மூன்றாம் உலக நாடுகள் மீது
பதியும் கழுகின் பார்வையில்
பற்றியெரியும் வனங்கள்
தூக்கிட்டுக் கொள்ளும் விவசாயிகளென
விரிந்த உரையாடலின்
ஊடாக
அவன் தோள் பையிலிருந்து தவறிய
கண்ணிகளாய் பின்னிக் கிடந்த
திங்கள் முதல் ஞாயிறு வரையிலான
குருதி மனம் கமழும் நாட்களை
அவன் கைகளில் அளித்து விட்டு
இரத்த கவுச்சி இல்லாத ஒரு நாள்
பற்றி கேட்டேன்
கண்ணாடி கோப்பையிலிருந்த மதுவின்
இறுதி மிடரைப் பருகியவன்
அது வாரத்தின் எட்டாவது நாளென
புன்னகையை
உதிர்த்து விட்டு
வெளியேறினான்.
நான் பனிகட்டியைப்போல்.
ஆவியாகிக் கொண்டிருந்தேன்......


சாலையில் நசுங்கிக் கிடந்தாலும்
மூளையில் உதித்து மனதுக்குள்
நுழையும் பாம்பு என்று சொல்
தரும் பதற்றத்தை தவிர்க்கவே
முடிவதில்லை
எப்பொழுதும் நம்மை குறி
பார்த்துக் கொண்டிருக்கும்
ஒரு துப்பாக்கியைப் போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக