வியாழன், 2 டிசம்பர், 2010

நகரம்
 பீர்க்கம் கொடியென ஓடும்
இந்நகர தெருக்களில்
அலுமினிய தட்டில் நிரம்பி வழியும்
இருளை சுமந்து திரியும் சிறுமியை
சிதிலமுற்ற கர்ப்ப கிரகத்திற்குள்
அழைத்து செல்கிறானவன்
செவ்வரி ஓடிய கண்களுடன்
அச்சிறுமி திரும்பும்
அந்நேரம் இந்நகரம் தீப்பிடித்து எரிந்திருக்க வேண்டும்
ஆனால்,எல்லாம் வல்ல இறைவனருளால்
வீதியெங்கும் படிந்து கிடக்கிறது
சோடிய விளக்கின்
மஞ்சள் வெளிச்சம்.

கோடை
பதநீர், கள், நுங்கு, பானகம்
கம்பங் கூழ், கேழ்வரகு கூழ்
குளிர்ந்த பீர், பழங்கள் புசித்து
எண்ணெய்யுள் மூழ்கினாலும்
உடலை அழுத்தும் வெட்கை
குளம் போல் மனதில் பெருகும்
வெறுமையில் பூத்த மலர்களென
தான் செல்லும் வழிநெடுக
கசந்த சொற்களை
உதிர்ந்து செல்கிறது
இந்த கோடை!

பசி
உச்சி வெயிலை போல் பனிபொழிகிறது
குளிருக்கு மூட்டிய நெருப்பில்
வாட்டிய
ஆட்டிறைச்சியை புசித்தனர்
குகை ஓவியத்திலிருந்து பாம்புகள்
தீண்ட
அரவங்களாய் சமைத்தனர் அவ்விருவரும்
அவனை அவளும்
வேட்கை கொண்டு சமைக்க
நீளும் இந்த குளிர்கால இரவில்
அறையெங்கும் வியாபித்திருக்கிறது
தவளைகளின் கூக்குரல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக